முன்னேற்றம்

 *தினமும் என்னை கவனி.* 


அன்பானவர்களே, கர்த்தருடைய மகா பெரிதான கிருபையால் *தினமும் என்னை கவனி* என்ற இந்த ஊழியத்தை கடந்த ஒரு வருடமாய் நடத்தி வந்த தேவனுக்கு கோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். கடந்த ஒரு வருடமாய் தினந்தோறும் தேவனுடைய வசனத்தையும்,  ஆவிக்குரிய சிந்தனைகளையும், பிரசங்க குறிப்புக்களையும் ஒவ்வொரு நாளும் ஆயத்தம் செய்யவும், அவைகளை அநேகருக்கு அனுப்பவும், அநேகர் இதன் மூலம் ஆசீர்வதிக்கப்பட உதவி செய்த தேவனுக்கு கோடி ஸ்தோத்திரங்கள்.🙏 


இதுவரை அவருடைய கிருபையால் வழி  நடத்தின தேவன் இனிவரும்  நாட்களிலும் நம்மை வழிநடத்துவாராக.  உங்களுடைய ஜெபங்களில் இந்த ஊழியத்துக்காக தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள்.🙏


இந்த நாளிலும் தேவன் நமக்கு கொடுத்த வார்த்தையை  தியானிக்கலாம். 


 *வாழ்க்கையில் முன்னேற நான்கு திறவு கோல்கள்.* 


👉 இன்றைக்கு அநேகர் தங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வரவிரும்பியும் எவ்வளவோ முயற்சி செய்தும் முன்னுக்கு வர முடியாமல் அலசடிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


👉 எவ்வளவோ போராடியும் முடியாமல் தங்களையே தாங்கள்

நொந்துகொண்டு சோர்ந்து போய் இருக்கிறார்கள்.


👉 படி படி என்று எவ்வளவவோ என் பெற்றோர்கள் சொன்னார்கள் நான் படிக்கவில்லை இப்போ அதற்கேற்ற பலனை நன்றாய் அனுபவிக்கிறேன்.


👉 இந்த உலகத்திலே எனக்கு உதவி செய்து என்னை தூக்கிவிட ஒருத்தரும் இல்லை.


👉 அதிகமாக விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன் ஒன்றும் நடக்கவில்லை என அநேகர் புலம்புவதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.


இந்த நாளிலும் நாம் நம்முடைய வாழ்க்கையில் முன்னேற தேவன் விரும்புகிற நான்கு சுபாவங்களை பார்க்கலாம்.


 *1.நன்றியுணர்வு என்கிற சுபாவம்.* 


கொலோ-3:15 தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது. இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள். நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.


ஒரு மனிதனின் சுவாசத்தை காட்டிலும் அவனுக்கு நன்றியுணர்வு என்பது மிகவும் மேலான்து.


என்றைக்கு ஒரு மனிதன் நன்றி மறந்து போகிறானோ அன்றே அவன் குணநலனில் மரித்தும் போகிறான்.


ஒரு முறை 10 குஸ்டரோகிகளை ஆண்டவர் இயேசு சுகப்படுத்தினார் ஆனால் ஒருவன் மாத்திரமே திரும்பி வந்து நன்றி சொன்னான் மற்ற ஒன்பது பேர் நன்றி சொல்லவில்லை அவர்களுக்கு அந்த உணர்வே இல்லாமல் இருந்தது.


நமக்கு இக்கட்டு நேரங்களில் உதவி செய்தவர்களையும் அந்த சம்பவத்தையும் நாம் ஒரு நாளும் மறக்கக் கூடாது.


ஒரு வேளை நமக்கு உதவி செய்தவர்களை காட்டிலும் எல்லாவிதத்திலும் நாம் உயர்ந்து போனாலும் நாம் நன்றி மறவாமல் எப்போதும் அவர்களுக்கு நன்றியுள்ளவர்காளாக இருக்க வேண்டும்.


உண்மையான நன்றி வாயின் வார்த்தையினால் சொல்வதல்ல. நமக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றியோடு வாழ்வதாகும்.


நன்றிக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு நாயைவிட வேறொன்றையும் நாம் சொல்ல முடியாது.


 *2. தாழ்மை என்கிற சுபாவம்* .


சங்-138:6 கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும். தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார். மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.


யாக் 4:10 கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள். அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.


தன்னை அலங்கரிக்க ஒரு மனிதன் பயன்படுத்தும் எல்லா வித அணிகலன்களை காட்டிலும் மிகவும் அழகானது மிகவும் விலையேறப்பெற்றது தாழ்மையெனும் அணிகலனே.


நம்முடைய அழகிற்காக, அறிவிற்காக, நல்ல திறமைகளுக்காக, நம்மிடம் உள்ள பொருட்களுக்காக நாம் பெருமைப்படக் கூடாது இவைகளை நமக்கு கொடுத்த ஆண்டவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.


பெருமை என்பது வாய் துர்நாற்றத்தை போன்றது நமக்கு அந்த துர்நாற்றம் தெரியாது ஆனால் எதிரில் உள்ளவர்களுக்கு நன்றாய் தெரியும்.


பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார் தாழ்மையுள்ளவர்களுக்கோ அவர் கிருபைகளை அளிக்கிறார்.


 *3.நேர்மை என்கிற சுபாவம்* 


சங்கீ:15:1. கர்த்தாவே. யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்?


2. உத்தமனாய் நடந்து. நீதியை நடப்பித்து. மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.


எல்லோருக்கும் முன்பாக மற்றவர்களின் பார்வையிலே நேர்மையாக நடந்துகொள்வது உண்மையான நேர்மையல்ல. யாரும் இல்லாத நேரத்தில் தனிமையாக இருக்கும்போதும் நேர்மையாக நடந்து கொள்வதே உண்மையான நேர்மையாகும்.


யோசேப்பின் வாழ்க்கையில் இது காணப்பட்டது.


எந்தவிதமான ஆதாயத்திற்காகவும்  நம் வாழ்வில் உள்ள நேர்மையை கொன்றுவிடக் கூடாது.


எதை இழந்தாலும் பரவாயில்லை நேர்மையைாய் இருப்பதை விட்டுவிடக் கூடாது இதற்கு யோபு நல்ல ஒரு உதாரணம். 


 *4. கடின உழைப்பு என்கிற சுபாவம்.* 


நீதி-10:4 சோம்பற்கையால் வேலை செய்கிறவன் ஏழையாவான். சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை

உண்டாக்கும்.


ஆண்டவருக்கு அடுத்தபடியாக மற்ற மனிதர்களை நம்புவதை காட்டிலும். மற்ற எதையாகிலும் நம்புவதை காட்டிலும் தைரியமாய் கடின உழைப்பை நம்பலாம்.


தாயத்து தகடு அதிர்ஸ்டம் போன்றவற்றை நம்புவதை காட்டிலும் கடின உழைப்பை நம்பி உழைக்கும் போது நிச்சயம் நாம் நல்ல நிலைக்கு வரமுடியும் நல்ல பேர் புகழையும் பெறலாம்


வசதியானவர்களின் அறிமுகம் நட்பு கிடைத்தால் முன்னேறிவிடலாம் என நினைக்க வேண்டாம் உழைப்பு என்கிற ஒன்று மாத்திரம் உடன் இருந்தால் கோடிபேர் கூட இருப்பது போன்றது.


வெறுங்கையாக இருக்கிறேன். என்று சொல்லாதீர்கள் 10 விரல்களே மூலதனம் இரு கரங்களையும் 10 விரல்களையும் கொண்டு மலையை கூட நொறுக்கி போடலாம்.


பிரியமானவர்களே...இந்த நான்கு நல்ல சுபாவங்கள் நம்மிடம் இருக்கும்போது நாம் எந்த மூலையில் இருந்தாலும் ஜனங்கள் நம்மை தேடி வருவார்கள்.


நமக்கு நல்லதோர் விலாசத்தை இந்த நான்கு சுபாவங்களும் ஏற்படுத்தும்.


யாருடைய சிபாரிசும் நமக்கு தேவைப்படாது தேவனே நம்மில் மகிழ்ந்து புதிய வழிவாசல்களை திறப்பார்.


இந்த நான்கு திறவுக்கோல்களையும் பின்பற்றுவோம் தேவன் தாமே நம்முடைய வாழ்க்கையை ஆசீர்வதித்து நம்மை உயர்த்தி ஒவ்வொரு நம்மை பெலப்படுத்துவாராக.🙏


குறிப்பு: இந்த செய்தி என்னுடைய ஆவிக்குரிய தகப்பனார் பாஸ்டர்.L.ஆரோன் ஆறுமுகம் அவர்கள் 04-02-2018-ம் ஆண்டு கொடுத்த தேவனுடைய வார்த்தை.


#watchmeeveryday #தினமும்என்னைகவனி #godswordsandthoughts

#sdaniel

#forprayer(9941741051)

Comments

Popular posts from this blog

Make Excellence a Habit

பணிவு

Loosers